விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடிகை குஷ்பூ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், “ஒரு பெற்றோராக, 16 வயது மகளின் இழப்பால் விஜய் ஆண்டனி, அவரது மனைவி பாத்திமா மற்றும் அவர்களின் இளைய மகள் ஆகியோர் எப்படி இதைத் தாங்கிக் கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு பலவீனமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஒருபோதும் ஆறாத காயத்தை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் எப்போதும் தங்கள் பெற்றோரிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் பேசலாம். அவர்கள் உங்கள் யோசனைகளுக்கு உடன்படாமல் இருந்தாலும் இறுதியில் புரிந்துகொள்வார்கள்.
பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். உங்கள் மீது விழும் சிறு கீறல் கூட அவர்களுக்கு வலி கொடுக்கும். நீங்கள் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.
மன அழுத்தம், மன நெருக்கடி அல்லது எந்த வகையான அழுத்தத்திலும் இருந்தால், தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.