முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலேயே சமூக நீதி, பெண்ணுரிமை இல்லை. கடந்த 2019-ல் பாலை குடித்து ருசி கண்ட பூனை மீண்டும் பாலை குடிக்க வருவதால் மக்கள் ஏமாற கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினை பூனையுடன் ஒப்பிட்டு பேசிய வானதி சீனிவாசன்.
மேலும் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள் உள்ளிட்ட அதிமுகவின் திட்டங்கள் நல்ல திட்டங்கள் வானிதி சீனிவாசன் புகழாரம். செய்தியாளர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளரை பாஜக பிரமுகர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் நடக்க இருப்பது மாநிலத்தில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை எனவும், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் என்றார்.

அப்போது எதிர்க்கட்சிகள் வந்தால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியை முன் வைக்குமாறு கேட்டு கொண்டார். அப்போது வழக்கமாக ஊரில் தண்ணீர் வரவில்லை என கவுன்சிலரிடம் கேட்டால் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என கேட்பார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து 1 எம்பி கூட இல்லாத நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு 12 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி இலவசமாக கொடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் உள்ள 1.15 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்து வருவதாக கூறினார்.

மேலும் 1.55 லட்சம் வீடுகளுக்கு கழிப்பிடம் அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறினார். பாஜக எம்பி இல்லாமலே திட்டங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக எம்பி இருந்தால் ஏகப்பட்ட திட்டங்கள் கிடைக்கும் என்றார்.
அப்போது வீடில்லாத ஏழைகளுக்காக வீடுகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, முத்ரா கடனுதவி என பல திட்டங்கள் கொடுக்கப்பட்டதாக கூறினார். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவா என்று சொல்லி வந்த நிலையில் தற்போது ஓ இந்தியாவா என்று கூறும் நிலைக்கு வந்துள்ளதாக கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் பொய்களை சொல்லி வருவதாக சாடினார். கடந்த 2019-ல் இந்த பூனை பாலை குடித்து ருசி கண்டதாகவும், மோடி தமிழ்நாட்டிற்கு எதிரானவர் என பொய்யை சொல்லி மக்களின் மண்டையை கழுவி மீண்டும் அந்த பூனை பாலை குடிப்பதற்காக வருவதாகவும் மக்கள் ஏமாற கூடாது என்றார்.
தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை மோடி செய்துள்ளதாக வானதி சீனிவாசன் அப்போது கூறினார். தமிழ்மொழி என கூறி வருவதாகவும், தமிழ்மொழி பள்ளிகளை மூடி விட்டு ஆங்கில பள்ளிகளை நடத்தி வருவதாகவும், அவர்களின் ஒரு குழந்தையாவது தமிழ் வழி கல்வி பயில்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.

ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எந்த வசதியும் இல்லை என்றார். பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வந்த லேப்டாப் நிறுத்தப்பட்டதாகவும், தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டதாகவும், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சைக்கிள் முறையாக கொடுப்பதில்லை என்றார்.
பேருந்தில் இலவச பயணம் என கூறும் நிலையில் பேருந்துகளே வருவதில்லை எனவும் பிறகு எப்படி பயணிப்பது என்றார். அனைத்து பெண்களுக்கும் என கூறி விட்டு தற்போது மகளிர் உரிமை திட்டம் அனைவருக்கும் வரவில்லை என்றார்.

சமூகநீதி, பெண்ணுரிமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனை மட்டும் அமைச்சராக்கினார் எனவும், அவரது மகளை கொண்டு வரவில்லை என வானதி சீனிவாசன் சாடினார்.
முதலமைச்சர் வீட்டில் கூட பெண் குழந்தைக்கு சமூக நீதி இல்லை என்றார். திமுக தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவர் ஒருவர் வர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

பாஜக மாநில தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவரை கொண்டு வந்ததாகவும், அருந்ததியரை மத்தியில் அமைச்சர் ஆக்கியதாகவும், பட்டியல் இனத்தவருக்கு தமிழ்நாட்டில் முக்கிய துறைகள் ஒதுக்கப்படுவதில்லை எனவும் சாடினார்.
தமிழ்நாட்டில் கீதாஜீவன் என்ற பெண் அமைச்சராக இருந்ததாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதும் கீதாஜீவன் பின்வரிசைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கு வாக்களித்தால் அவரால் பாராளுமன்றத்தில் கேள்வி மட்டுமே கேட்க முடியும் எனவும், டெல்லிக்கு சென்று அமைதியாக இருப்பதற்கு எதற்கு ஒரு எம்பி எனவும், பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டு கொண்டார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் விவசாயிகள் அதிகம் இருக்கும் தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிலை முன்னெடுப்போம் எனவும், 39தொகுதியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாகவும், இரட்டை இலக்க எம்பிக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

மற்ற கூட்டணிகளை காட்டிலும் பிரதமர் வேட்பாளர் என்பது தங்களது கூட்டணிக்கு சாதகமானது என்றார். கச்சத்தீவு விவகாரம் குறித்த பிரச்சினைக்கு 2004 முதல் 2014 வரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அப்போது எங்களுக்கு தெரியாமல் கச்சத்தீவை தொடுத்ததாக முதலமைச்சர் கூறியதால் தான், முதலமைச்சர் ஆலோசனையின் பேரில் தான் அன்றைய பிரதமர் கச்சத்தீவை கொடுத்ததை மக்களிடம் தெளிவுபடுத்தி வருவதாக வானதி கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஊடுருவல் குறித்த கேள்விக்கு இதெல்லாம் எங்கிருந்து படித்தீர்கள், வாட்சப்பில் வந்ததை படித்து கேட்டல் பதில் சொல்ல வேண்டுமா எனவும், ஆதாரம் எங்கே எனவும், சுப்ரமணியசாமி கூறியுள்ளதற்கு ஆதாரம் எங்கே எனவும் அப்படி ஒன்றும் இல்லை என்றார்.
மேலும் 2036 வரை மோடி தங்கினால் பாஜக வெற்றி பெறாது என முதலமைச்சர் கூறு வருவது குறித்த கேள்விக்கு ஒவ்வொரு கூட்டத்திலும் கண் மூடி, கண் திறந்தால் பாஜகவை பற்றி பேசுகிறீர்களே எனவும், எங்களை பற்றி கவலைப்படாதீர்கள் விட்டுவிடுங்கள் என்றார்.

எடப்பாடி, ஸ்டாலின் இருவரும் திமுக, அதிமுக தான் போட்டி என கூறி வருவது குறித்த கேள்விக்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களின் பாஜக பற்றி பேசவில்லை என்றால் நாங்கள் போட்டியில் இல்லை என கூறி கொள்கிறோம் என்றார்.
பயம் இருப்பதால் மோடி தொடர்ந்து தமிழ்நாடு வருகிறாரா என்ற கேள்விக்கு தமிழ்நாடு பிடித்திருப்பதால் இன்னமும் பல முறை வருவார் என்றார்.

உதயநிதி தொடர்ந்து செங்கல் காண்பிப்பது குறித்த கேள்விக்கு 2021-ல் செங்கல்லை காண்பித்து வந்ததாகவும், முதல் கையெழுத்து நீட்டுக்காக போடுவதாக 2021ல் ஏமாற்றியதாகவும், இப்போது என்ன செய்ய போகிறார் என்றார்.
தமிழை ஆட்சி மொழியாக மாற்ற எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு ஆட்சி மொழி என்பது ஏற்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனவும், மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், நீட் தேர்வு தமிழில் எழுதலாம், மத்திய அரசின் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம்.

தமிழர்களே இல்லாத இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை பிரதமர் பேசி வருவதாகவும், குப்பையில் வைத்திருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் வழக்காடு மொழி என்பது நீதிமன்ற சார்ந்த விஷயம் எனவும், நிச்சயம் அதற்காக குரல் கொடுப்போம் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் பிரச்சாரத்திற்கு வந்த போது கூட்டத்தில் பீர் பாட்டில் ஒன்று சாலையில் உடைந்த நிலையில் அதனை படம்பிடித்த செய்தியாளர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளரை பாஜக பிரமுகர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.