புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தின் போது திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 9 தொகுதிகள் + புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை திமுக, காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்தது. அந்த தேர்தலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள வைத்திலிங்கம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம், அதிமுகவின் ஜி தமிழ் வேந்தன் நாம் தமிழர் கட்சியின் ஆர். மேனகா உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வேட்புமனுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மீண்டும் வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் புதுச்சேரியில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான் இன்று மதியம் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது மிகவும் சோர்வாக காணப்பட்ட வைத்திலிங்கம் திடீரென்று மயங்கி விழுந்தார். பின்பு பிரசாரம் செய்த வாகனத்திலேயே அவர் மயங்கி விழுந்த நிலையில் அருகே இருந்த நிர்வாகிகள் தாங்கி பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதை அடுத்து நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகே உள்ள வீட்டில் அமர வைத்தனர். பின்னர் மயங்கி விழுந்த நிலையில் தண்ணீர் வழங்கப்பட்டது.
அப்போது 15 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது மதியம் அதிகமான வெயில் இருந்த நிலையில் அவர் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.