கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நேற்று மரணமடைந்தார். ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி வயது (77). ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
மதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். அருகிலேயே தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகள் இருந்துள்ளது.

இதை அடுத்து குடும்பத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் கணேசமூர்த்தி இருந்து வந்த நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தியின் உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மிகவும் மோசமடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 5.05 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கணேசமூர்த்தி எம்பி இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இதை அடுத்து ஈரோடு அவல்பூந்துறை குமாரவலசில் உள்ள உள்ள தோட்டத்தில் மதியம் கணேசமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,

முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், ராமசாமி, ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், மதிமுக மாநில நிர்வாகி மல்லை சத்யா, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, உஉக தலைவர் செல்லமுத்து,
கரூர் எம்பி ஜோதிமணி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அற்புதம்மாள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கணேசமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக எம்.பி கணேசமூர்த்தியின் உடலுக்கு நேரில் அஞ்சலி
பின்னர் மாலையில் அவரது தோட்டத்தில் உடல் எரியூட்டப்பட்டது. அப்போது கணேசமூர்த்தியின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான அவல்பூந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி;- ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

திமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர். பின்னர், வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார்.
ஆற்றல்மிகு தளகர்த்தராக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணா துயரத்தை தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;- நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக துரை வைகோ நிற்பதாக கணேசமூர்த்தியிடம் நான் கூறியதற்கு அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு நன்றாகத்தான் இருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தேன். என்னுடன் சிறையில் இருந்தவர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகனும் அங்குள்ள மாவட்ட செயலாளரும் என்னிடம் கூறியிருந்தனர்.

பின்பு எதிர்பாராத விதமாக அவர் மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த செய்தி எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
எதற்காக மன உளைச்சலில் இருந்தார் என்ற காரணம் குறித்து தற்போது கூற இயலாது. எம்.பி. சீட் இல்லாததால் இறந்தார் என்பதில் உண்மை இல்லை. அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.