பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துவக்கத்தில் குடிகார ஆசாமிகள் யாரேனும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று அசால்ட்டாக நினைத்த பயணிகளுக்கு , மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் பயணித்த சில மீட்டர் தூரத்திலே மாற்று பேருந்தின் கண்ணாடிகளும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் அவர்களுக்கு அச்சம் சூழ்ந்துகொண்டது , அச்சத்தில் சூழ்ந்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்திலிருந்து அலறியடித்து ஓடினர்.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததால் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது சின்னக்காவனம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்கியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடியும், பின் பக்க கண்ணாடியும் முற்றிலும் சேதமடைந்தன .
அதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து அச்சத்தில் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்தின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் கல் வீசி உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல் துறையினர் மற்றுமொரு மாற்று பேருந்தை வரவழைத்து பயணிகளை அங்கிருந்து பத்திரமாக காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
சின்னக்காவனம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ததால் அதனை கண்டிக்கும் வகையில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொன்னேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அடுத்தடுத்த 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொன்னேரி காவல் துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் கல் வீசி தாக்கி உடைக்கப்பட்ட சம்பவம் சின்னக்காவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.