திமுகவினரின் அன்று நடந்ததை மறைக்க முடியாது. பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையில் கை வைத்து இழுத்தார் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாகப் பேசிய திமுக எம்.பி கனிமொழி, மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். உடனே இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் பேசுகையில், “அன்று 1989ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தவர்கள் திமுகவினர். இன்று திரௌபதி குறித்துப் பேசுகிறார்கள்” என விமர்சித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படும் ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்ட நாள். அன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தினம். அன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் வரலாற்றிலே எங்கும் கண்டிராதவகையில் திமுகவினரால் மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்டது.
அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அன்றைக்கு தோழமை கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதாவது காவல்துறையை தன் வசம் வைத்து இருந்த அன்றைய முதல்வர் கருணாநிதி செய்த சட்ட மீறல்களை சுட்டிக் காட்டி அதை முதலில் விவாதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஜெயலலிதாவை அசிங்கமாக: அதாவது ஜெயலலிதா எழுதிய ஒரு கடிதத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று கருதி 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அதிகாலை எந்தவித காரணமும் சொல்லாமல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எனது இல்லத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்து தமிழக காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் வீட்டில் வைத்து இருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து சென்றனர்.
இதை செய்யச் சொன்னவர் அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி. அவர்தான் அன்றைக்கு காவல்துறையையும் கையில் வைத்து இருந்தவர். இது போன்று கருணாநிதியால் அன்றைக்கு அரங்கேற்றப்பட்ட நடவடிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒருவர் எழுப்பியதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி, தான் செய்த தவறுகள் எங்கே வெளி வந்துவிடுமோ என்ற பயத்தில் சட்டசபையில் பிரச்சனையை திசை திருப்ப முயன்றார். அப்போது தனக்கு எதிரே அமர்ந்து இருந்த ஜெயலலிதாவை நா கூசும் வார்த்தைகளால் வசைபாடுகிறார்.
அதனை தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்களும் அன்றைய அவைத்தலைவர் தமிழ்க்குடிமகனிடம் அவையை ஒத்திவைத்து விவாதிக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். கருணாநிதி செய்த அத்துமீறல்கள் வெளிப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவை கொலைவெறியோடு தாக்கினர்.
இதை கண்டு முதலாவதாக திமுகவை சேர்ந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே.பழனிசாமி என்பவர் மேஜை மீது ஏறி ஜெயலலிதாவை தோள் பட்டையில் ஓங்கி உதைத்து அடிக்க பாய்கிறார். அப்போது கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்றைக்கு தமிழக அமைச்சராக இருப்பவர் தரையில் கூட நடக்காமல் மேஜை மீது ஏறி விலங்குகள் மரக்கிளைகளில் தாவுவது போல் ஒவ்வொரு மேஜையாக தாவித் தாவியே ஜெயலலிதா அருகில் வந்து வேட்டியை மடித்துக் கட்டி ஜெயலலிதாவின் தோள் பட்டையில் எட்டி உதைக்கிறார்.
இதையெல்லாம் மறந்து விட்டு திமுகவினர் பச்சைப் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உண்மைகளை மறைத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உண்மைக்கு வலிமை அதிகம். அது என்றாவது ஒரு நாள் வெளியில் வந்தே தீரும். ஏதோ விதிவசத்தால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருக்கும் வரையாவது தமிழகத்திற்கு ஏதாவது நல்லதை செய்ய முயற்சியுங்கள் என்பதை இந்த ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.