திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த திருப்பத்தூர் அருகே புதூர் நாடு ஊராட்சி வலுதலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காளி (60) இவரது சித்தப்பா மகன் சம்பத் (36) இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை இவர்களுக்கு சொந்தமான இடத்தில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த சம்பத் தான் மறைத்து வைத்திருந்த கள்ள துப்பாக்கியால் காளியை சுட்டு உள்ளார்.

அதில் காளி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காளி கூறுகையில் தனக்கும் தனது சித்தப்பா மகன் சம்பத்துக்கும் ஏற்கெனவே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் இன்று தன்னை கள்ள துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமே இருந்து கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சொத்துக்காக அண்ணனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.