பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 206.87 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதற்காக தனியார் நிறுவனத் தலைவர் மற்றும் இருவருக்குத் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான தீர்ப்பில் பல்பாபிச்சினிச்சி சாஃப்ட்வேர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைவருமான பி.செந்தில் குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,07,62,000/- அபராதமும், எஸ்.காளிதாசன் என்கிற எச்.ஜெயக்குமார், தஞ்சன் செழியனார் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பி. செந்தில்குமாரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பல்பாபிச்சினிச்சி சாப்ட்வேர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27.09.2008 அன்று பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில், பல்பாச்சினிச்சி சாஃப்ட்வேர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான பி.செந்தில்குமார் மற்றும் பிறர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சென்னை அண்ணாசாலை கிளையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் ஸ்டார் பர்சனல் லோன் திட்டத்தின் கீழ் 149 கடன் கணக்குகளைத் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் என்று காட்டி போலி நபர்களின் பெயரில் தொடங்கி, கடன் பெற்றவர்களின் பெயரில் சம்பள சீட்டு மற்றும் அடையாள அட்டைகளைப் போலியாகத் தயாரித்துக் கடன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.206.87 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
விசாரணைக்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 30.09.2009 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் கண்டறிந்து அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.