பாஜகவில் சேரும்படி என்னையும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களையும் மிரட்டுகிறார்கள். ஆனால், நான் தலை வணங்கமாட்டேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக பதவி வகித்த மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றும், இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு மீது நாளை, மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருநபர் 3-க்கும் மேற்பட்ட முறை சம்மனை புறக்கணிக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு எதிராக அமலாக்கத்துறை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கும்.
இதுகுறித்து குறிப்பிட்ட தேதியில் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த கைது வாரண்டையும் புறக்கணித்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்.

இந்த வழக்கில் டெல்லி நாளை மறுதினம் நடைபெற உள்ள வழக்கு விசாரணையின் போது கெஜ்ரிவால் ஆஜராவாரா? 5 என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் ஆஜராகாத பட்சத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று டெல்லி கிராரியில் இரண்டு புதிய பள்ளி கட்டிடங்களுக்கு கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால்;- “பள்ளி கூடங்களை கட்டியதால் தான் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டார். மொஹல்லா *கிளினிக்குகளை கட்டியதற்காக சத்யேந்தர் ஜெயின் சிறைக்கு சென்றார். பின்னர் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தற்போது என்னையும், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களையும் பாஜகவில் சேரும்படி மிரட்டுகிறார்கள். ஆனால் மிரட்டல்களுக்கு நாங்கள் எப்போதும் தலை வணங்கமாட்டோம்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.