நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும். அதற்காக 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகுங்கள் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதுடன் தங்களை பலப்படுத்தி கொள்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி இளைஞர் அணி 2வது மாநாடு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், திமுக இளைஞரணி மாநாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னையில் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது; நாம் கை காட்டுபவரே பிரதமராக வரவேண்டும் என்றால் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பொதுமக்களிடம் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறதோ? அவர்கள் தான் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவர் தான் வேட்பாளர் என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இந்த தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவும் இல்லை. தேர்தலில் கூட்டணி விஷயத்தை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். யார் யாருக்கு எவ்வளவு இடம்; கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தையும் தலைமை பார்த்துக் கொள்கிறோம்.
தேர்தலில் 100 ஓட்டுக்கு ஒரு நபர் என பிரித்து வைத்து உள்ளோம். அந்த நபர்கள் அந்த குடும்பத்தினரை சந்தித்து அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைந்து உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் குடும்ப பின்னணி குறித்தும் அவர்கள் யாருக்கு ஆதரவான வாக்காளர்கள் என்பவற்றையும் கண்டறிந்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றுங்கள். திமுக ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இத்த திட்ட மகளிரிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தாம் செல்லும் இடங்களில் எல்லாம் நான் பார்க்கும் பெண்களிடம் உண்மையான அன்பை காண்கிறேன். மக்களின் அசைக்க முடியாத வாக்கு வங்கி நம்மிடம் தான் இருக்கிறது. என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை. மகளிர் திட்டங்களால் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இளைஞர்களை கட்சிக்கு ஈர்க்க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரும்பணியாற்றி வருகிறார். அதற்கான பயன் இளைஞர் அணி மாநாட்டில் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணிமாநாடு சிறப்பாக நடைபெற 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்டுவதற்கான வேலைகளில் தீவிரமாக செயல்படுங்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் வெற்றிபெற கடுமையாக பாடுபட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.