தரம்சாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டி இமாச்சல பிரதேசத்திலுள்ள தரம்சாலா மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யதது.
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். நியூஸிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வேவும், வில் யங்கும் களமிறங்கினர். டேவன் கான்வே ரன் கணக்கை தொடங்காமலேயே, மொகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில் யங் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்துவீச்சில் போல்டானார். இதனால் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினர். அணியின் ஸ்கோர் 178-ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 87 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்தில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த கேப்டன் டாம் லேதம் 5 ரன்களில் குல்தீப் பந்தில் வீழ்ந்தார். சிறிதுநேரம் களத்தில் நீடித்த கிளென் பிலிப்ஸ் 23 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். சாப்மேனை 6 ரன்களில் வெளியேற்றினார் ஜஸ்பிரீத் பும்ரா. மிட்செல் சான்ட்னர் 1 ரன்னிலும், மேட் ஹென்றி ரன் எடுக்காமலும் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர்.ஆனால் மறுபுறம் டேரில் மிட்செல் நிலைத்து ஆடி சதம் விளாசினார். அவர் 127 பந்துகளில் 130 ரன்கள் விளாசிய நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் லாக்கி பெர்குசன் ரன்-அவுட்டானார். 50 ஓவர்களில் அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 54 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார்.

இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி செய்துள்ளார். இதற்கு முன்பு கபில்தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் ஆகியோர் தலா ஒரு முறை 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தனர். இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. விராட் கோலி, ரோஹித்தின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ரோஹித் 46, ஷுப்மன் 26, ஸ்ரேயஸ் 33, விராட் கோலி 95, கே.எல்.ராகுல் 27, சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 39, மொகமது ஷமி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.