ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரையிறுதியில், நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின. நியூசிலாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் வழக்கம்போல அடித்து ஆட, இந்திய ஸ்கோர் வேகமெடுத்தது. ரோகித், கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ரோகித் 47 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார்.

அடுத்து கில், கோஹ்லி இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்தியா 22.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தபோது, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கில் ‘காயத்தால் ஓய்வு’ பெற்றார். அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட இந்திய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மறு முனையில் பொறுப்புடன் விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். கோஹ்லி, ஷ்ரேயாஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 163 ரன் சேர்த்து அசத்தினர். கோஹ்லி 117 ரன் (113 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் கான்வே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் இணை 3வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 105 ரன் (70 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), சூரியகுமார் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியே சென்றிருந்த கில், கடைசி ஓவரில் மீண்டும் களத்துக்கு திரும்பி பேட்டிங்கை தொடர்ந்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் குவித்தது. கில் 80 ரன் (66 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), கே.எல்.ராகுல் 39 ரன்னுடன் (20 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ 3, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் கான்வே, ரச்சின் இருவரும் தலா 13 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 7.4 ஓவரில் 39 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடிக்க, இந்திய தரப்பு சற்று பதற்றமானது. வில்லியம்சன் 52 ரன் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஷமி நழுவவிட்டார். நியூசிலாந்து ஸ்கோர் 200 ரன்னை கடந்து முன்னேற, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் நியூசிலாந்துக்கு சாதகமாக மாறுவதுபோல் தோன்றியது. அதற்கேற்ப டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில், ஷமியை மீண்டும் பந்துவீச அழைத்தார் ரோகித். இந்த மாற்றத்துக்கு கை மேல் பலன் கிடைத்தது.
ஷமி வீசிய 33வது ஓவரின் 2வது பந்தில் வில்லியம்சன் (69 ரன், 73 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), 4வது பந்தில் டாம் லாதம் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 32.4 ஓவரில் 220 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.எனினும், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஜோடி தொடர்ந்து போராட ஆட்டம் மீண்டும் பரபரப்பானது. கடைசி 8 ஓவரில் 100 ரன்னுக்கும் மேல் தேவைப்பட்டதால், நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடியில் சிக்கினர். பிலிப்ஸ் 41 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் ஜடேஜாவிடம் பிடிபட, இந்தியவீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சாப்மேன் 2 ரன் எடுத்து குல்தீப் சுழலில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, எல்லைக்கோட்டருகே ஜடேஜாவிடம் பிடிபட்டார். கடைசி வரை மிரட்டிக் கொண்டிருந்த டேரில் மிட்செல் 134 ரன் (119 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, நியூசிலாந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன் எடுத்தது. 70 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணி உலக கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்தியாவிடம் தோற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 57 ரன் விட்டு கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா , குல்தீப், சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். விக்கெட் வேட்டை நடத்திய ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 10வது வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளிடையே இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன், நவம்பர்19ம் தேதி அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோதும்.