விழுப்புரம் மாவட்டம், அடுத்த உள்ள கண்டாச்சிபுரம் அருகே மனைவியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த உள்ள கண்டாச்சிபுரம் அருகே காரணை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது 48. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் திண்டிவனம் அருகே வீடூரை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஏழுமலை சரியாக வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டிற்கு வருவார். மதுவுக்கு அடிமையான அவர் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால் வரலட்சுமி தனது பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017 ஜூலை 6 ஆம் தேதி காரணையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த வரலட்சுமி கடப்பாறையால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து அவரது தந்தை பாண்டுரங்கன் அளித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் ஏழுமலை மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும், விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஏழுமலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.