நாகர்கோவில் அரசு பேருந்து பிரேக் பிடிக்கவில்லை என கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ். இவர் நாகர்கோவிலில் உள்ள ராணித்தோட்டம் பணிமனைக்குரிய அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை மற்றும மிகவும் பழுதான நிலையில் இருந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார்.மேலும் அந்தப் பேருந்தை இயக்க முடியவில்லை என்றும், இயக்கினால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை என கூறி, மாற்று பேருந்து மூலம் பயணிகளை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேருந்தை ஒப்படைத்தார்.இப்பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் பேருந்து பாதுகாப்பானதாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.