மத்திய இணை அமைச்சர் ஆன பின்பு முதல்முறையாக கோவை வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;-
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மிகப்பெரிய கருப்பு தினம் எனவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தை யாராலும் ஏற்று கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் திமுக அரசின் கையாளாகத்தனத்தை காட்டுவது மட்டுமல்லாமல், இது போலி திராவிட மாடல் என்றும், ஆட்சிக்கு வந்தததும் மதுவிலக்கு என்றார்கள்.

ஆனால் பல இடங்களில் இன்று மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசு இந்த சம்பவத்திற்கு முழுபெறுப்பேற்பதோடு, மதுவிலக்கு துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த அரசு கள்ளசாரயத்திற்கு துணை போகின்ற அரசாக உள்ளதாகவும்,
மக்களின் உயிரை எடுக்கின்ற அரசாக உள்ளதாகவும், எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்பதால் பொது வெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து பலமணி நேரமாகியும் இதுவரை நிகழ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஏன் பார்க்கவில்லை என கேள்வி எழுப்பியவர், மக்களை சந்திக்க முடியாத நிலையில் முதல்வர் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மரக்காணம் சம்பவத்திலும் சிபிசிஐடி தான் விசாரித்தது. ஆனால் சிபிசிஐடி விசாரணை என்பது, சம்பவத்தை மூடி மறைக்கின்ற செயலாக தான் பார்க்கிறேன் என்றும், குறிப்பாக தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சியினர் யாரும் வாய்திறக்கவில்லை. திமுக அரசின் மீது விமர்சனம் செய்ய அவர்கள் தயங்குகிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.