திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் தலையில் காயத்துடன் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த திண்டிவனம் அருகே சென்னை – திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள பாதிரி பனஞ்சாலை பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதை அடுத்து அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் என்பவர் ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தடயவியல் நிபுணர் சுரேஷ் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் நண்பர்களுடன் மது அருந்தி தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நெஞ்சில் உமா என்று பச்சை குத்தியிருப்பதால் கள்ளக்காதல் பிரச்சனையில் யாராவது கழுத்தை நெரித்து தலையில் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் மோப்ப நாய் ராக்கியை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மோப்பநாய் ராக்கி அந்த இடத்தில் மோப்பமிட்டு திண்டிவனம் மார்க்கமாக ஓடி குச்சிகுளத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று நின்றதையடுத்து அந்த வழியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள், சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை உதவி ஆய்வாளர்கள் பாரதிதாசன், மகாலிங்கம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு குறைவதற்குள் தற்போது மீண்டும் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எறியாததாலும் இருண்ட பகுதியாக உள்ளதால் இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.