மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் மாயமான 17 வயது சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு, 4 மணி நேரத்திற்கு மேல் பின்னர் ஆற்றுப் படுகையில் மீட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்றும் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 25 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணையில் 24 மி.மீ., சிவகிரியில் 20 மி.மீ., ராமநதி அணையில் 3 மி.மீ., செங்கோட்டையில் 2.80 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., தென்காசியில் 1.40 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோடை காலத்தில் அருவிகளில் நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று பழைய குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மதியம் சுமார் 2.30 மணியளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரிறைச்சலுடன் தண்ணீர் சீறி பாய்ந்தால் அருவியில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் ஓடி தப்பித்தனர்.

ஒரு சில வினாடிகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் வெள்ளம் வேகமாக பாய்ந்தது. இதனால் அருவியில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் வெளியே வர முடியாமல் உயரமான பகுதிகளில் ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி, ஸ்ரீராம் நகரை சேர்ந்த குமார் என்பவரது மகன் அஸ்வின் (17) என்ற சிறுவன் தனது தாய்மாமாவுடன் பழைய குற்றாலம் அருவிக்கு குளிக்க வந்ததும், அவர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய குற்றாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் அஸ்வினின் உடல் 4 மணி நேரத்திற்கு மேல் பின்னர் ஆற்றுப் படுகையில் சிக்கி இருந்த சிறுவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.