- அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த கிராமப்புற மாணவியான தனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி கனிஷ்கா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி எல்லம்மாள் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிதா. மணிகண்டன் கூலித் தொழிலாளி. நடுத்தர குடும்பத்தினரான இவர்களின் 2வது மகள் கனிஷ்கா. தஞ்சையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தவருக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவப்படிப்பு என்பது லட்சியக்கனவாக இருந்தது. இதனால் 2022ம் ஆண்டு மேல்நிலைப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள தனியார் அறக்கட்டளையில் நீட் தேர்விற்காக இலவச பயிற்சி மேற்கொண்டார்.2023ம் ஆண்டு முதல்முறையாக நீட் தேர்வு எழுதிய போது 513 மதிப்பெண் எடுத்தார். அப்போது 2வது சுற்று கலந்தாய்வுக்கு கட் ஆப் மார்க் 556. தனியார் மருத்துவக்கல்லூரியில்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது. வசதி வாய்ப்பு இல்லாததால் இந்தாண்டு மீண்டும் இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார் கனிஷ்கா. இப்போது இவர் எடுத்த மதிப்பெண் 613. இந்தாண்டு கட் ஆப் மார்க் 620 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் இம்முறையும் இவரால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை. தந்தையிடம் பொருளாதார வசதி இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுடன் உள்ளார் கனிஷ்கா. தனக்கு அரசு உதவினால் நிச்சயமாக தனது லட்சியம் நிறைவேறும் என்றார்.
இது குறித்து மாணவி தெரிவிக்கையில் எனக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவப்படிப்பு என்பது தீராத லட்சியமாக இருந்து வருகிறது. இதற்காக கடினமாக படித்தேன். நடுத்தர குடும்பம். பொருளாதாரம் அதிகமில்லை. அதனால் சென்னையில் தனியார் அறக்கட்டளை வாயிலாக நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி எடுத்து படித்தேன். அதில் முதல்முறையாக கடந்த ஆண்டு 513 மதிப்பெண், இந்தாண்டு 613 மதிப்பெண் எடுத்து 2ம் சுற்று கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கப்பட்டதால் மருத்துவப்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆண்டுக்கு ரூ.40 லட்சம் கட்டணம் வந்துவிடும். இதே அரசு மருத்துவக்கல்லூரி என்றால் 5 ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம். இந்தாண்டு கட் ஆப் மார்க் உயர்த்தப்பட்டதால் தனியார் கல்லூரியில்தான் இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. என்னுடன் படித்தவர்கள் தற்போது இளநிலை பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படிக்கின்றனர். எனக்கு 2 ஆண்டுகள் நீட் தேர்வுக்காக போய்விட்டது. இந்தாண்டு மருத்துவப்படிப்பு நிச்சயம் படிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உதவிக்கரம் செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அரசோ தனியாரோ தனது படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும் அப்போதுதான் தனது மருத்துவ கனவு நிறைவேறும் எனவும் தெரிவித்தார்.
பேட்டி கனிஷ்கா மாணவி