நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட் வழங்க கடும் எதிர்ப்பு. மீறி வழங்கினால் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என வெள்ளாளர் முன்னேற்றக்கழகம் எச்சரிக்கை. மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்போடு தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்.

அவர் பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தலைமையும் அவருக்கு தான் திருநெல்வேலியில் வாய்ப்பு கொடுக்கும் என தெரிகிறது. எனவே தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல் ஆளாக தேர்தல் அலுவலகத்தை நயினார் நாகந்திரன் சமீபத்தில் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே தாமாக முந்தி கொண்டு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது நம்பிக்கைபடியே கட்சி அவருக்கு வாய்ப்பும் கொடுத்தது. எனவே இந்த முறையும் எப்படியும் தனக்கு எம்.பி சீட் கிடைத்து விடும் என்பதில் நயினார் நாகேந்திரன் உறுதியாக உள்ளார். இதுபோன்ற சூழலில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டரில், புறக்கணிக்காதே புறக்கணிக்காதே வெள்ளாளர்களை புறக்கணிக்காதே, பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர்களை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட்டா? வெள்ளாளரே விழித்து கொள்.
திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வி சந்திக்கும் எச்சரிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதனால் சீட் கிடைக்கும் நம்பிக்கையில் தேர்தல் அலுவலகம் திறந்த சில நாளிலையே நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது திருநெல்வேலி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.