கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,”தமிழ் நாட்டில் அனைத்து மக்களும், சாதி, மதம் பாகுபாடின்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 19.04.2023 அன்று தமிழக சட்டப்பேரவையில் கிறிஸ்துவர்களாக மதம் மாறியவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்து பட்டியல்இன மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காகம், இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை இராமநாதபுரம் மாவட்ட பாஜக பட்டியல் அணி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் இரு பிரிவினரிடையே சாதிய, மத ரீதியிலான மோதலை தூண்டும் இந்த திமுக திராவிட மாடல் அரசு தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதை அம்மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். ஓட்டு அரசியலுக்காக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி வரும் திமுக அரசு உடனடியாக தனி சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியோடும், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமியின் ஒப்புதலோடும், மாவட்ட தலைவர் தரணி முருகேசனின் இராமநாதபுரம் மாவட்டம் பாஜக பட்டியல் அணி சார்பாக மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப் பெரிய தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.