பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : மனு மீது 2 நாட்களில் வாதத்தை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

3 Min Read

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்த வழக்கு , முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் டிச.18ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு , மேல்முறையீட்டு மனு மீது 2 நாட்களில் வாதத்தை முடிக்கவும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்று கடந்த ஜுன் மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்திருந்தார்.

இதேப்போல் ராஜேஸ்தாசிற்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பின்னர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தனக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனும் தனித்தனியாக கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையின் போது வாதிடுமாறு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் தரப்பிற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் இருத்தரப்பினருமே தொடர்ந்து வாதிட கால அவகாசம் கேட்டு வந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, மேல்முறையீட்டு மனு மீது கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றம் மூலமாக மேல்முறையீட்டு மனு மீது வாதிட தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவை பெற்று வந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேல்முறையீட்டு மனு மீது வாதிட கால அவகாசம் அளிப்பதாகவும், அதன்படி வரும் டிசம்பர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் 2 நாட்களில் வாதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் இதற்காக வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share This Article
Leave a review