பொங்கல் பண்டிகையை யொட்டி விழுப்புரம் பகுதியில் இருந்து கரும்புகளை அறுவடை செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், வேலியம்பாக்கம், அத்தியூர் திருக்கை, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்தனர். இவை நன்கு செழித்து வளர்ந்த நிலையில் இதனை தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில், அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும். இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், மரக்காணம், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்களில் உள்ள 1,009 முழுநேர ரேஷன் கடைகள்.
மீதமுள்ள 245 ரேஷன் கடைகள் என மொத்தம் உள்ள 1254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 960 பேருக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 434 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படள்ளது.
இதற்காக கரும்பைதவிர மற்றப்பொருட்கள் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்யப்பட்டு நேரடியாக ரேஷன் கடைகளில் இறக்கி வைக்கப்பட உள்ளது. இதையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்காக அவற்றை கொள்முதல் செய்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்காக வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கரும்பு தோட்டத்திற்கு நேரடியாக சென்று மொத்த கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு ஏக்கருக்கு 150 கட்டுகள் (20 கரும்புகளை கொண்டது) என்ற வீதத்தில் விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் கொள்முதல் செய்தனர்.
அதோடு அவர்கள், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்து அவற்றை ரேஷன் கடைகளுக்கு மினி லாரி, லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் அறுவடை செய்யும் கரும்புகளை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்புவோம். ஆனால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அரசு சார்பில் ஒரு முழு கரும்பு வழங்குவதால் அவர்களே எங்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

அரசு கொள்முதல் செய்யும் கரும்புகளை தவிர மீதமுள்ள கரும்புகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கவும் முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ.1/2 லட்சம் வரை செலவாகும். ஆட்கள் கூலி, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, உர செலவு போக எங்களுக்கு ரூபாய். 90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் பொங்கல்? பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கி வருவதால் அரசே எங்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்வதால் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் ஆட்கள் கூலி, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, உர செலவு ஆகிய அனைத்துமே கூடியுள்ளதால் இனிவரும் காலங்களில் கரும்புக்கு விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றனர்.