கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார் அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களின் எதிரொலியாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து சாராய ஊறல்களை தேடி பிடித்து பறிமுதல் செய்யும் வேட்டையில் இறங்கியுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்டுள்ள சாராய வியாபாரிகளையும் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மணப்பாச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் கள்ளசாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கூடுதல் போதைக்காக ஊமத்தங்காயை அரைத்து சாராயத்தில் கலந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி சுரேஷ் மீது 48 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். கொலை, அடிதடி, சாராயம், மணல் கடத்தல் என பல வழக்குகளில் அவரது பெயர் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஆத்தூரில் அதிமுக விவசாயிகள் பிரிவு செயலாளாரக இருந்துள்ளார். இப்போது அதிமுகவில் உறுப்பினராக மட்டும் தொடர்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 16 பேருக்கு பார்வை முழுவதும் பறிபோய்விட்டது. இன்னும் 50 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.