புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல் மூலம் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பது, கஞ்சா விற்பனை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 6 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
உடனே அவர்களை குற்றப்பிரிவு தலைமை காவலர் சிரஞ்சீவி மற்றும் காவலர் வேல்முருகன் ஆகியோர் நீண்டதூரம் துரத்திச்சென்றனர். அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

அப்போது பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அரியாங்குப்பம் பிசிபி நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் புஷ்பராஜ் வயது (18) என தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு மற்றும் கொலை வழக்கு உள்ளது.
மேலும் இன்னொருவர் முத்தியால்பேட்டை சோலைநகர் கல்லறை பின்புறம் உள்ள பாஸ்கர் மகன் ஆகாஷ் என்ற மணிவாசகன் வயது (25) என்பதும், இவர் மீது ஏற்கனவே முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இதுதவிர அரியாங்குப்பம் கஜேந்திரன் மகன் விஷ்வா என்ற விஷ்வராஜ் வயது (20) மற்றும் பிசிபி நகரை சேர்ந்த ராமகிருஷணன் மகன் ஹேமச்சந்திரன் வயது (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, 3 செல்போன் மற்றும் ஒரு மோட்டார் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் முதலியார்பேட்டையை சேர்ந்த விக்கி மற்றும் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கணபதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.