சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பல்கலை. சான்றிதழ்கள் கீழே கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
இதை அடுத்து, இருவரும் அங்கு சென்று பார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் ஏஎஸ்பிரகுபதிக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், போலி சான்றிதழ்களைக் கைப்பற்றினர்.

மேலும், ஒரு செல்போன் பில்லும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த செல்போன் பில் சிதம்பரம் மன்மதசாமி நகர் சங்கர் தீட்சிதர் (37) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்த போது, சிதம்பரம் மீதிகுடி ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த நாகப்பன் (50) என்பவருடன் சேர்ந்து, கம்ப்யூட்டர் மூலம் போலிச்சான்றிதழ் தயாரித்து வந்தது தெரியவந்தது.

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த நாகப்பன், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். போலீசார் நாகப்பனிடம் விசாரித்ததில், சங்கர் தீட்சிதர் உதவியுடன் அண்ணாமலை பல்கலை. பெயரில் போலி சன்றிதழ்கள் தயாரித்து, பலருக்கும் விற்றதை ஒப்புக்கொண்டார்.
பின்னர், அவர்களது வீடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) ஏ.பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.