நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் 27 ஆம் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக கமல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்;-
”பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். என் அரசியல் எதிரி சாதியம் தான். ரிமோட்டை எடுத்து அடிச்சீங்களே டிவியில ஆனால் இறுதியில் அங்கேயே போகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது. டிவியும் அங்கேயே தான் இருக்கிறது. நம்ம வீட்டு ரிமோட் நம்ம வீட்டு டிவி. ஆனால் அந்த டிவிக்கான கரண்டையும் ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவக்கூடிய சக்தி ஒன்றியத்தில் உருவாகி கொண்டிருக்கிறது.
இதை இனிமேல் நான் எறிந்தால் என்ன வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செயல்களுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும். 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கி பிடிக்க பாஜக முயற்சிக்கிறது.

எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்” என்றார்.