ராமநாதபுரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக களம் இறங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக்கிற்கு வேறு 1 தொகுதி தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என ஒரு தகவல் உலா வந்தாலும் கூட, அதனை பாஜக தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே நடந்த சண்டை ஊரறிந்த ஒன்றாகும். அரசு விழாவில் எல்லோர் முன்னிலையிலும் தொலைச்சுபுடுவேன் என தன்னை பார்த்து நவாஸ் கனி ஆட்காட்டி விரலை காட்டி பேசியதை அமைச்சர் ராஜகண்ணப்பனால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் சார்பில், நவாஸ் கனிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்பதில் ராஜகண்ணப்பன் உறுதியாக உள்ளார். இதனிடைடே திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி ராமநாதபுரம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனோடும் சரி, திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தோடும் சரி இணக்கமாக இருந்து வருகிறார் ராஜீவ்காந்தி. அதுமட்டுமல்ல அமைச்சர் அன்பில் மகேஷின் ஆசியும் இவருக்கும் உண்டு. இதனால் ராமநாதபுரத்தில் திமுக போட்டியிட்டால் ராஜீவ்காந்தி தான் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உண்டு. இதனிடையே ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் திமுக கூட்டணியில் கேட்டுப்பெற முஸ்லீம் லீக் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதனால் இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகிவிட்டது.