நடைபயணத்தில் மாற்றம்.! நாளை தொடங்கவுள்ளதா யாத்திரை.?

0
85
அண்ணாமலை

மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அவரது நடைபயண திட்டத்தில் திடீரென மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர் மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்கிறார். ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விதமாகவும் அண்ணமலையின் பாத யாத்திரை உள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். அன்று முதல் அண்ணாமலை தொடர்ந்து பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

நடைபயணத்தின்போது மக்களை சந்திக்கும் அண்ணாமலை, திறந்த வேனில் நின்றபடி முக்கிய இடங்களில் பேசவும் செய்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை அவசர அவசரமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. கட்சி மேலிடம் அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை. தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்திற்கு இடையே அவ்வப்போது ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயண திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயண திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று அண்ணாமலை திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையே அண்ணாமலை நடைபயணம் சென்றுவிட்டார்.

அதேபோல், மதுரையில் நேற்று காலையில் நடைபயணமும், மாலையில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நேற்றைய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று அண்ணாமலையின் நடைபயணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்க உள்ளதாகவும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவர் பங்கேற்பதில் சிக்கல் உள்ளதால் அண்ணாமலையின் நடை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். இதனால், அண்ணமலை நாளை முதல் மீண்டும் நடைபயணத்தை மேற்கொள்வார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் இணை பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி கூறுகையில், “நடைபயணத்தின் இடையே எங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் கூடுதலாக ஒரு நாள் ஓய்வு எடுக்கும் வகையில் பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”. நாளை திருச்சுழியில் இருந்து நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சங்கரன் கோவிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெல்லையில் அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்” என்றார். மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா பேச இருப்பதாகவும் அவர் பங்கேற்பதற்காகவே அண்ணாமலையின் நடைபயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில், மதுரையில் நடைபெறும் நடைபயணத்தில் 5 கி.மீ. தூரம் மன்சுக் மாண்டவியா அண்ணாமலையுடன் நடக்க இருப்பதாகவும் அப்போது, மக்களிடம் மன்சுக் மாண்டவியா உரையாற்றுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here