விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 1.1.2024 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த 27.10.2023 முதல் தொடங்கி 9.12.2023 வரை நடைபெற்றது. இந்த பணியின் போது 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இதனை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி. பழனி கலந்து கொண்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது;- 16,69,577 பேர் கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 8,15,967 ஆண் வாக்காளர்களும், 8,33,657 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 208 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் படிவம் 7 மூலம் பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் ஆகியவற்றின் மூலம் 5,747 ஆண் வாக்காளர்களும், 6,685 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 2 பேரும் என 12,434 பேர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் 8,10,220 ஆண் வாக்காளர்களும், 8,26,972 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 206 பேர் என மொத்தம் 16 லட்சத்து 37 ஆயிரத்து 398 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்தனர்.

தற்போது சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் படி 14,349 ஆண் வாக்காளர்களும், 17,823 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 7 பேரும் என மொத்தம் 32,179 பேர் புதியதாக சேர்க்கப்பட்டனர். அதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8,24,569 ஆண் வாக்காளர்களும், 8,44,795 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 577 பேர் உள்ளனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் ரமேஷ், திமுக நகர செயலாளர் சக்கரை, அதிமுக ராமதாஸ், பாஜக சுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் சவுரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுப்பிரமணியன், பகுஜன் சமாஜ்வாடி கலியமூர்த்தி, தேமுதிக மணிகண்டன், காங்கிரஸ் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.