கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது தியானத்தை இன்று நிறைவு செய்கிறார்.
மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டிருந்தார். தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் மோடி தியானம் செய்ய முடிவு செய்தார்.

அதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரிக்கு வந்தார். முதலில் பகவதி அம்மனை தரிசித்து விட்டு விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.
விவேகானந்தர் சிலை அமைந்துள்ள மைய மண்டபத்தில் காவி உடையில், கையில் ருத்ராட்ச மாலையுடன் அமர்ந்து மோடி தியானம் மேற்கொண்டார். நேற்று காலை பிரதமர் மோடி சூரிய உதயத்தை கண்டுகளித்து சூரிய பகவானையும் வழிபட்டார். அதை தொடர்ந்து, பிரதமர் மோடி, தியானத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நுழைய கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டு;- பிரதமர் தியானம் மேற்கொள்வது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெறுப்பு அரசியலை விதைப்பதால் பிரதமர் மோடி, விவேகானந்தரைப் போல் நற்பெயரைப் பெற முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தியானம் செய்ய வேண்டும் என்றால் வீட்டிலேயே பிரதமர் மோடி அதை செய்திருக்கலாம் எனவும், இத்தனை நாடகம் தேவையில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை 3 மணியளவில் பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்வார் என கூறப்படுகிறது. அதன்பின்னர், படகு மூலமாக கரை திரும்பும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.