விசைத்தறி தொழிலை மேம்படுத்த பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சூலூர் பகுதியில் இன்று காலை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது காங்கேயம்பாளையம் பகுதியில் துவங்கி குமாரபாளையம், சாமலாபுரம், சோமனூர், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பகுதிகளில் விசைத்தறி நெசவுத்தொழில் பெரும்பான்மையாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை, மத்திய அரசு சார்பில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட்ட பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதனால் விசைத்தறி இந்த பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய தொழிலாக உள்ளது. திமுக அரசின் மின்கட்டண உயர்வு விசைத்தறி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் 15 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அப்போது வரும் காலங்களில் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தி விசைத்தறி இயக்க முடியாது.

அப்போது சோலார் மின் தகடுகள் பொருத்துவதும் அவசியமாகிறது. அந்த வகையில் சோலார் மின்தகடு பொருத்துவதற்கான மானியத்தை அனைத்து தரப்பினருக்கும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.
அதேபோல் விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காக மீண்டும் பவர் டெக்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டு விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

எனவே, பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.