பொன்னேரி அருகே அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் மூக்கை எலி கடித்து சேதப்படுத்தியதாக உறவினர்கள் புகார்.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநரான குப்பன் (34).

இவர் நேற்று குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், உறவினர்கள் சடலத்தை சென்று பார்த்த போது குப்பன் மூக்கு சேதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் சென்று கேட்ட போது சடலத்தை எலி கடித்து விட்டதாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும்,

அதன் காரணமாகவே குப்பன் மூக்கு சேதமடைந்திருந்ததாக குற்றம் சாட்டினர். காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, உறவினர்கள் சடலத்தை பெற்று சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.