2023, டிசம்பர் 14 அன்றிரவு, மால்டா நாட்டின் கப்பலான எம்.வி. ரூயனில் கடற்கொள்ளை சம்பவம் குறித்த தகவல் யுகேஎம்டிஓ (UKMTO) இணையதளத்தில் கண்காணிக்கப்பட்டது. இந்த கப்பலில் அடையாளம் தெரியாத 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
விரைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, இந்திய கடற்படையின் கடல் ரோந்து விமானத்திலிருந்து 2023, டிசம்பர் 15 அன்று எம்.வி ரூயன் கப்பலின் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அந்த கப்பலில் 18 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் யாரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் இருந்த ஐஎன்எஸ் கொச்சியும் உடனடியாக அந்தப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.
ஐ.என்.எஸ் கொச்சி கப்பல், 2023, டிசம்பர் 16 அன்று அதிகாலை எம்.வி.ரூயன் கப்பலை இடைமறித்து நிலைமையை மதிப்பிடுவதற்காக அதன் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டரை ஏவியது. எம்.வி. ரூயன் கப்பலில் ஊடுருவிய கடற்கொள்ளையர்கள் ஊழியர்கள் அனைவரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டது ஊழியர் ஒருவரால் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது, ஊழியர்களில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட எம்வி கப்பலின் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதம் தாங்கிய வீரர்களின் தலையீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கடற்கொள்ளையர்களால் ஊழியர்களுக்கு சிக்கல் நேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் உரிய நடவடிக்கைகள் போர்க்கப்பலால் மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 16 அன்று ஒரு ஜப்பானிய போர்க்கப்பலும் இப்பகுதிக்கு வந்தது.
கடத்தப்பட்ட கப்பல் சோமாலியாவின் (போசாசோவுக்கு அப்பால்) கடல் எல்லைக்குள் நுழைந்தது. காயமடைந்த குழு உறுப்பினரை சிகிச்சைக்காக டிசம்பர் 18 அதிகாலை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர். காயமடைந்த ஊழியர் ஐ.என்எஸ் கொச்சிக் கப்பலில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.
மேற்கண்ட சம்பவத்தின் காரணமாக ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் கடற்கொள்ளை எதிர்ப்பு முயற்சிகளை அதிகரிக்கும் நோக்கில் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் இந்தியக் கடற்படை உறுதிபூண்டுள்ளது.