ஆபரேஷன் அஜய் : இஸ்ரேல் போரில் சிக்கிய 21 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

3 Min Read
சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழர்கள்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு, தாங்கள் இழந்த நிலத்தை மீட்கும் முயற்சியாக கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் போராளிக்குழுமீது பதில் தாக்குதல் நடத்தும் நடவடிக்கையாக , பாலஸ்தீனத்தின் காஸாமீது இஸ்ரேல் தொடர் போர் தாக்குதல்கள் தொடுத்துவருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இழந்த நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இரான், இராக், சிரியா, சவூதி அரேபிய போன்ற நாடுகள் நிற்கின்றன.

அதே சமயம் இந்தப் போரில், ஹமாஸ் குழுவை தீவிரவாத இயக்கம் என அறிவித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்க் கப்பல்கள் ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை விநியோகித்து இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறது . அமெரிக்காவின் நிலைப்பாட்டை பின்பற்றியுள்ள இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது .

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

கடந்த ஐந்து நாள்களாக நடந்துவரும் யுத்தத்தில் 2500-கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.. இத்தகைய பதற்றமான, நெருக்கடியான சூழலில், இஸ்ரேலில் 20,000 திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்துவருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது .

மேலும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் , இஸ்ரேலிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் அஜய்யின் ஒரு பகுதியாக, நேற்று (வெள்ளிக்கிழமை) 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் வந்தடைந்தனர் .

கோயம்புத்தூர், திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 21 பேர் இஸ்ரேலில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

விமான நிலையம்

அவர்களில் 14 பேர் சென்னையையும், ஏழு பேர் கோவையையும் வந்தடைந்தனர் . சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் அவர்களை வரவேற்று வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரக அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கையில்,போரினால் பாதிக்கப்பட்டு மேற்கு ஆசிய நாட்டில் சிக்கித் தவிக்கும் மேலும் 114 தமிழர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டதாகவும் , அவர்களையும் தாயகம் அழைத்து வருவதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

மேலும் அவர்கள் கூறுகையில் , இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக ஹெல்ப்லைன் எண்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தனர் .

இஸ்ரேல் போரில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் விவரங்களை அங்கு இயங்கும் தமிழக தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு அந்த விவரங்களை மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது , போர் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும் மற்றும் அவர்களை பத்திரமாக மீட்பதற்காகவும் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை தனது ட்விட்டர் பதிவில் , “இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் எங்கள் குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக #OperationAjay தொடங்கப்பட்டுள்ளது . சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.வெளிநாட்டில் உள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார் .

மேலும் 212 இந்திய குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து மீட்டு சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

Share This Article
Leave a review