இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது;- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது நேரத்தை வீணாக்குவது, சக்தியை வீணாக்குவது, பணத்தை வீணாக்குவது, எரிபொருளை வீணாக்குவது ஆகும்.
காலாகாலமாக இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட தொண்டர்களின் கை, எந்த காலத்திலும் மாற்றி ஓட்டுப்போடாது. கட்சி எடுக்கும் முடிவை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கன்டோன்மென்ட் தேர்தலில் வாக்குச்சாவடிகளை நாங்கள் (அதிமுக) கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

அதற்கு ராணுவ அதிகாரி தான் தலைவராக இருப்பார். அந்த தேர்தலுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தவறு நடந்திருந்தால் அவர்களே நடவடிக்கை எடுத்து இருப்பார்களே. அதிமுக தேர்தலை சந்திக்க என்றைக்குமே பயந்தது இல்லை.
தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாக தேர்தலை நடத்துவோம் என்று உறுதிகொடுக்க முடியுமா, முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அண்ணாமலை எவ்வளவு தான் பேசினாலும், அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது.

10 பேரை சேர்த்துக் கொண்டு தேர்தலில் நின்றால் அது ஒரு வெற்றியா, நீங்கள் தனியாக நின்றிருக்க வேண்டும். அதற்கு தயாரா? நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இவ்வளவு வாக்கு சதவீதம் எடுத்திருக்கிறோம் என்று அண்ணாமலை சொல்லி இருக்க வேண்டும்.

பாஜக கூட்டணியில் பாமக, ஐஜேகே, ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ், டிடிவி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டு 10 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கி விட்டோம் என்று சொல்வது சரியான வாதம் கிடையாது.
தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக ஓட்டு சதவீதம் ஏறவே ஏறாது. தேர்தலை புறக்கணித்துவிட்டதால் அதிமுக தொண்டர்கள் யாரும் பாமகவுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.