வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீர் உட்பட 3 பேர் நாளை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜெய்பூரில் கைது செய்தனர். அப்போது அவரை 7 நாள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்தனர்.
அதில் அவர் அளித்த தகவலின் படி, சென்னையில் போதை பொருட்களை உணவு பொருட்களுடன் பார்சல் செய்து கொடுத்த நெருங்கிய நண்பரான சதா (எ) சதானந்த் என்பவரை கடந்த 12 ஆம் தேதி இரவு போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் சென்னை பெருங்குடியில் பல ஆண்டுகளாக ரகசியமாக போதை பொருட்களை உணவு பொருட்களுடன் பேக்கேஜ் செய்யும் குடோனை கண்டுபிடித்து தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அதற்கு சீல் வைத்தனர்.
அதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் கடந்த 18 ஆம் தேதி சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 23 நபர்களுக்கு போதை கடத்தலில் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அதேநேரம் ஜாபர் சாதிக் நெருங்கிய நண்பராக திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளார். ஆனால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது இயக்குநர் அமீர், எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கையாகவும், வீடியோ மூலமாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் 7 நாள் காவலில் அளித்த தகவலின் படி, தற்போது டெல்லியில் உள்ள தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக் நெருங்கிய நண்பர்களான திரைப்பட இயக்குநர் அமீர்,
அப்போது தொழிலதிபர்களான அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகிய 3 பேர் நாளை டெல்லியில் உள்ள தேசிய போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளனர்.
இந்த சம்மனை 3 பேரிடமும் அதிகாரிகள் நேரில் வழங்கினர். இந்த விசாரணை முடிவில் தான் ஜாபர் சாதிக்குடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட 3 பேருக்கு தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.