காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யுடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

அதாவது, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இத்தகைய சூழலில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.

சவுக்கு சங்கர் கைதாகி கோவைக்கு அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கி அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரது கையில் கட்டுப் போடப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று காலை 2-வது முறையாக சவுக்கு சங்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் அவரது கையை ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் சர்க்கரை நோய் பாதிப்புக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போது அவர் திடீரென கோஷம் எழுப்பினார். எனது கையை கோவை ஜெயிலில் உடைத்து விட்டனர்.
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சவுக்கு சங்கர் திடீரென கோஷம் எழுப்பியதால் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.