திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சமீபகாலமாக மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருகிறது.
அதில் இந்த வழியாக செல்லும் கோரையாறு, மறைக்காகோரையாறு, பாமணி ஆறு போன்ற ஆற்று படுக்கை பகுதியில் டிராக்டர்கள் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகமாக தொடர்கிறது.

மேலும் மணலை மூட்டையாக கட்டி, இரு சக்கர வாகனத்திலும் கடத்தி செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த செயல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவில் இடங்கள் தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையும் நடைபெற்று வருகிறது.
அதேபோல் திருச்சி போன்ற பகுதியில் உள்ள அனுமதி பெற்ற மணல் குவாரிகள் மூலம் உரிய ஆவணத்துடன் மணல் எடுத்து கொண்டு முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் மணல் லாரிகள் மறுமுறை இந்த ஆவணங்களை திருத்தம் செய்து வைத்து கொண்டும்,

போலியாக ஆவணங்களை தயாரித்து கொண்டும், முத்துப்பேட்டை அருகே உள்ள ஆறு மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளில் மணலை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வது போன்ற சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தொடர்வது குறித்து ரகசிய தகவல் வந்ததையடுத்து முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா, ஆர்டிஓ (வாகன சோதனை) அசோக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் கோவிலூர் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை நோக்கி சென்ற இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்த போது போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணல்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து லாரியை ஒட்டி வந்த மானாமதுரை மருதங்கநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் ஜெயராமன் (47), திருச்சி மண்ணச்சநல்லூர் தொலுவாதபட்டியை கண்ணியப்பன் மகன் சின்னையன் (42), புதுக்கோட்டை ஆவிடைகோவில் தெரு சுப்பிரமணியன் மகன் பழனிமுத்து (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியையும் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.