கவிஞர் சினேகனின் அறக்கட்டளை பெயரை மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, நடிகை ஜெயலட்சுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினிமா பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அப்போது கடந்த 2022 ஆம் ஆண்டு ‘சினேகம்’ அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி பணம் வசூலித்து மோசடி செய்வதாக கூறப்படுகிறது.

பின்னர் கவிஞர் சினேகன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதிலுக்கு பதில் புகார் அளித்தார்.

அப்போது சினேகன், ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் தனித்தனியாக அழைத்து வந்து விசாரித்தனர். இதனிடையே சினேகன் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி நடிகை ஜெயலட்சுமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து சினேகனும், ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பதிலுக்கு மனு தாக்கல் செய்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவிஞர் சினேகன் மற்றும் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில், இருவர் மீதும் சென்னை திருமங்கலம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி இல்லத்திற்கு சென்ற திருமங்கலம் போலீசார், அவரிடம் 3 மணி நேரம் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் வீட்டில் இருந்து அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதை அடுத்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு அனைத்து ஆதாரங்களை கொடுத்தும் போலீசார் கைது செய்துள்ளதாக நடிகை ஜெயலட்சுமி குற்றம் சாட்டினார்.