சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

3 Min Read

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47வது புத்தக காட்சியை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். இதில் கூறியிருப்பதாவது: வாசிப்பு பழக்கம் என்பது ஒரு தனிமனிதனின் அறிவு திறத்தின் அடையாளம் மட்டும் அல்ல. ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவிற்கு வளர்ந்து உள்ளது என்பதற்கான அடையாளம். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் பெற மனிதருக்கு துணை நிற்கும் புத்தகங்களை போற்றுகின்ற அரசாக நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. இதனால், கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை உருவாக்கினார். நாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் உருவாக்கி உள்ளோம். புத்தகங்கள் மேல் எத்தகைய ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக சென்னை புத்தகக் காட்சியை போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image
சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்ததாக தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டு புத்தகக் காட்சி. உலகளாவிய அறிவு பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு, நமது செழுமையான தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளை பற்ற தமிழில் அவற்றை வழங்கவும் நடத்தப்படுகின்ற பன்னாட்டு புத்தக காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. வருகிற 16, 17, 18ம் தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ரூ.6 கோடி செலவில் நடக்கிறது. ஆங்கில எழுத்து உலகத்தில் இருப்பது போலவே 20 இலக்கிய முகவர்களை பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. எழுத்தாளர்களுக்கும், வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் பாலமாக இந்த இலக்கிய முகவர்கள் இருப்பார்கள். தமிழ் படைப்புகள் உலகின் பிற மொழிகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்தியாவில் எந்த மொழிக்கும் இப்படி இலக்கிய முகவர்கள் இல்லை என்கிற அளவில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முன்னெடுப்பு என்பது இலக்கிய திருவிழாக்கள். சென்னை, பொருணை, சிறுவாணி, காவிரி, வைகை என இலக்கிய திருவிழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் இளைஞர் இலக்கிய திருவிழாவும் நடத்தப்பட இருக்கிறது. இலக்கியம் என்பது இயக்கமாக மாற வேண்டும்.

சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மனிதரின் அன்றாட பழக்கமாக வாசிப்பு பழக்கம் இருக்க வேண்டும். புத்தகங்களை பரிமாறிக் கொள்வதை ஒரு இயக்கமாகவே உருவாக்கி இருக்கிறேன். எனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை கிராமப்புற நூலகங்களுக்கும், வாசக சாலைகளுக்கும் வழங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளேன்.
புத்தகம் வழங்குவது என்பது அறிவுக் கொடையாக அமையும். புத்தகம் வாங்குகின்ற பழக்கத்தை, நூலகங்களுக்கு செல்கின்ற பழக்கத்தை பள்ளிக் காலத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். இது தமிழ் பற்றை, தமிழ் ஆர்வத்தை, தமிழ் உணர்ச்சியை, தமிழ் எழுச்சியை உருவாக்கும். தமிழ் ஆர்வத்தை உருவாக்குபவையாக புத்தகக் காட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழினம் சிறக்க, தமிழ் மொழி சிறக்க வேண்டும். தமிழ் மொழி செழிக்குமானால், தமிழினம் செழிக்கும். தமிழ் மொழியும், இனமும் செழிக்க புத்தகங்கள் துணை நிற்கட்டும். 47வது சென்னை புத்தக காட்சி பெரும் வெற்றி அடையட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Share This Article
Leave a review