சேலம் அருகே பெத்த நாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளரிடம் அளித்த பேட்டியில்;- தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கோயில்களுக்கான பணிகளை செவ்வனே செய்து வருகிறது. இன்றைய தினம் கூட, 40 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) 20 கோயில்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. இதுவரை 1,270 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டன.

குறிப்பாக சேலத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இளைஞர் அணியின் மாநில உரிமை மீட்பு மாநாடு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனை திசை திருப்பும் நோக்கில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பிரசாரம் செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றில், நாளை தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், ராமர் பெயரில் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்;-

பந்தல்களை பிரித்தெறிவோம் என ஒருங்கிணைப்பாளர்களை மிரட்டுகிறார்கள். இந்து விரோத இந்த செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். திமுக இளைஞரணியின் மாநில உரிமை மீட்பு மாநாடு, இந்திய அளவில் பேசப்படும் மாநாடு ஆகும். அதனால் என்ன வேண்டுமானாலும் பேசி இந்த மாநாட்டின் மைய கருத்தை தள்ளிப்போட முடியாது. ஒன்றிய அமைச்சர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என விசாரித்து உண்மையை பதிவிட வேண்டும்.
இந்த நிலையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் எங்கும் தரிசன அனுமதி மறுக்கப்படவில்லை. உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடமை உணர்வு இருக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு ஆன்மிக விழாவாக இல்லாமல், அரசியல் விழாவாக இருப்பதால் தான் எதிர்ப்புகள் கிளம்பியது.
தமிழ்நாட்டில் சுத்தமாக இருக்கும் கோயில்களை, சுத்தம் செய்கிறது பாஜக. எல்லா கோயில்களிலும் திங்கள்தோறும் உழவார பணிகள் திட்டம் உள்ளதால், அனைத்து கோயில்களும் சுத்தமாக காணப்படுகிறது.