தோள்பட்டை எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலர் வைகோ (80), உயர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு வைகோ சென்றார்.

பின்னர், நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்த அவர், சனிக்கிழமை இரவு நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
அதில், அவருக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வைகோ, அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சில பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் அரசியல் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.