மரக்காணம் அருகே பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சென்னையில் 3 நாள் தீவிர சிகிச்சைக்குபின் நேற்று பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலின் பின்புறத்தில் உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 9 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழுவாரி கிராமத்தைச் சேர்ந்த கவுரி (45), ஆண்டாள் (37) உள்ளிட்ட 3 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்களில் ஆண்டாளை தவிர மற்ற 2 பேரும் ஜிப்மருக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக உரிமையாளரான ராஜேந்திரன், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சைபலன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பெண்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி சுனில், மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேந்திரன் இறப்பு தொடர்பாக வழக்கை மாற்றியமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் சான்றின் அடிப்படையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலை பகுதிக்கு வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.