திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. கடந்த 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
வீடு பாதிக்கப்பட்டு குடியிருக்க முடியாத சூழலில் வேறு மாற்று வழியும், வசதியும் இல்லாததால் அதே வீட்டில் குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அரசின் சார்பில் அந்த வீட்டை புதுப்பிக்க சில வருடத்திற்கு முன்பு ரூ 50 ஆயிரம் நிதி கொடுத்து மேற்கூரை புதுப்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இவர்களது பெயரில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடும் ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்டு வருகிறது.
வீட்டிற்கான பில் தொகை அனைத்தையும் பயனாளி எடுத்து ஒப்பந்தக்காரரிடம் கொடுத்தும், இரண்டு வருடமாகியும், வீட்டை ஒட்டாமல் அப்படியே போட்டு வைத்துள்ளாதாக கூறுகிறார்கள். இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு குடும்பத்தோடு தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த பொழுது, திடிரென மேற்கூறையின் சுவர் காரை பெயர்ந்து விழுந்ததில் குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பியுள்ளார்கள்.

அதில் சந்திரசேகர் மட்டும் காயமடைந்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள் சத்தமிட்டதில் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

சந்திரசேகர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் நலமாக உள்ளார்கள்.
ஆனால் வீடு கட்டுவதற்கான தொகையினை பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி கொடுக்காத ஒப்பந்தக்காரர், இதனை கண்டு கொள்ளாத அதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.