- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் சுற்றுலா செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்ற முகவரிடம் 13,66,725 ரூபாய் கொடுத்துள்ளார்.
தொகையை பெற்றுக் கொண்ட பின்னர் உறுதியளித்தப்படி, சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்பதால் ஜெயசிங் வசந்த் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனோகர் தாஸ் கடந்த2020ம் ஆண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது புகார் மீது முதல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி
கடந்த 2022ம் ஆண்டு மனோகர் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
நீதிமன்றத்தில் உறுதியளித்தப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மனோகர் தாஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குறைந்த கால இடைவெளியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/my-girlfriend-was-arrested-by-the-police-marina-pleads-for-bail/
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த கடந்த 2022ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதியில் இருந்து இன்று வரை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி , நான்கு துணை ஆணையர்கள், மூன்று உதவி ஆணையர்கள் மற்றும் ஆறு ஆய்வாளர்களின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நான்கு ஆண்டுகளாக புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பணியிட மாற்றத்தை காரணமாக கூறி அதிகாரிகள் தப்பிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13 அதிகாரிகள் நவம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.