- குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்–புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டீ.டீக்கராமன், ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு அவசர வழக்காக விசாரிக்கக் கூடிய வழக்கு எனக் கூறி, மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குத்தகை ஒப்பந்தத்தை மீறியதால் ெமட்ராஸ் ரேஸ் கிளப்பை அரசு கையகப்படுத்தியுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்புக்கு 160 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு கடந்த 1946 மார்ச் மாதம் ஆண்டுக்கு 614 ரூபாய் 13 அணாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இந்நிலையில், வாடகை பாக்கி தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்தை அரசுக்கு ரேஸ் கிளப் தரவில்லை. மேலும் குத்தகை ஒப்பந்தத்தை மீறி ரேஸ் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு நிலத்தை கிளப் பயன்படுத்தியதால் அந்த குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ரேஸ் கிளப் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி ரேஸ் கிளப் சார்பில் நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.