திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணவர் கந்தன்குமாருக்கு செலுத்திய ஊசி உடைந்து நூல் அறுந்ததால் இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (45). இவரது கணவர் கந்தன்குமார் (51). இவருக்கு மனநலம் குன்றிய நவீன்குமார் என்ற 14 வயது மகன் மற்றும் புவனேஷ் என்ற 9 வயது மகன் உள்ளனர். கந்தன்குமார் கார்பெண்டர் வேலை செய்து வந்தார்.

அவருக்கு அடிக்கடி ஏற்பட்ட தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவரது வயிற்றில் கட்டி இருந்தாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாக கூறி, முதுகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது செலுத்தப்பட்ட மயக்க ஊசி உடைந்ததாகவும், அதில் இருந்த நூல் சுமார் 8 சென்டிமீட்டர் அளவில் முதுகில் அறுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதை மறைத்து மருத்துவர்கள் இவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, முதுகு தண்டுவடத்தில் இருந்த 8 சென்டிமீட்டர் நூலை அகற்றினர். ஆனால் கந்தன்குமாரின் உடலில் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டது.

எனது கணவரின் வயிற்று வலிக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் முதுகில் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டு எனது கணவரின் உடல் உறுப்புக்கள் செயல் இழக்க காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

கணவர் வேலைக்கு செல்லாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கந்தன்குமாரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட கந்தன் குமாரின் மனைவி சாவித்திரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து சாவித்திரி குடும்பத்தார் அங்கிருந்து கண்ணீருடன் சென்றனர்.