நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைக்க தகுதி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடந்தது. இவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவிடுபொடியாகின.

அனைத்து மாநிலங்களிலும் ஆரம்பத்தில் இருந்தே பாஜக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் போட்டியாக இருந்தன. குறிப்பாக, அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தன.
அங்கு 80 தொகுதிகளில் பாஜக வெறும் 32 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. சமாஜ்வாடி 38, காங்கிரஸ் 6 என மொத்தம் 44 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவுக்கு முதல் அதிர்ச்சியை தந்தன. கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜகவின் கோட்டையாக இருந்த உபி இம்முறை தகர்க்கப்பட்டது.
அடுத்ததாக பாஜக பெரிதும் நம்பிக் கொண்டிருந்த மேற்கு வங்கத்திலும் அதிர்ச்சி முடிவே கிடைத்தது. அங்கு பலவிதத்திலும் பாஜகவால் பல குடைச்சலை சந்தித்த மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்துள்ளார்.

மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பாஜகவால் வெறும் 12-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது பாஜகவின் அடுத்த பின்னடைவாக அமைந்தது.
இதேபோல, 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவிலும் பாஜக பெரிய அளவில் வெற்றியை எட்ட முடியவில்லை. கடந்த 2019-ல் 25 தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக மாபெரும் வெற்றி பெற்ற ராஜஸ்தானில் இம்முறை அக்கட்சியால் 14 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.
காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் 1 தொகுதியில் முன்னிலையுடன் இந்தியா கூட்டணி புதிய எழுச்சி பெற்றது. அரியானாவிலும் கடந்த முறை 10 தொகுதிகளை வென்ற பாஜகவால் இம்முறை 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மீதமுள்ள 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மணிப்பூரில் கடும் வன்முறையால் அங்குள்ள 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. கேரளாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும் கிடைத்தன.
மார்க்சிஸ்ட் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் பாஜக கேரளாவில் தனது கணக்கை தொடங்கியது. தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் இந்தியா கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி கிடைத்தது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி, புதுச்சேரியில் 1 தொகுதியையும் வென்று 40-க்கு 40 வெற்றி பெற்றது. இவற்றை தவிர பிற மாநிலங்கள் பாஜகவுக்கு கைகொடுத்தன.

டெல்லியில் 7 தொகுதிகளையும், குஜராத்தில் 26 தொகுதிகளில் பாஜக 25, காங்கிரஸ் 1 தொகுதியை வென்றன. பீகாரில் 40 தொகுதிகளில் பாஜக 12 இடங்களை கைப்பற்றின. ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு நல்ல பலன் கிடைத்தது.
25 தொகுதிகளில் அங்கு தெலுங்கு தேசம் 16, பாஜ 3, ஜனசேனா 2 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் வென்றுள்ளது. கர்நாடகாவில் கடந்த முறை 25ல் 17 இடங்களை பிடித்த பாஜக இம்முறையும் 17 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது.
இதன் மூலம் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 290 இடங்களை கைப்பற்றியது. எனவே, ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு 240 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது.

இதனால், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 3வது முறையாக ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அசுர பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியை தொடர்ந்து தனது கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி,
3வது முறையாக பிரதமராக வரும் 9 ஆம் தேதிக்குள் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்த வரையிலும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணியும், ஒடிசாவில் முதல் முறையாக பாஜகவும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.