காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அதிமுகவை சேர்ந்த கள்ளசாராய வியாபாரி 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 66 பேர் நலமுடன் வீடு திரும்பினர். அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அந்தவகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் இருந்து 96 பேரும், புதுவை ஜிப்மரில் இருந்து 6 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து 22 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 2 பேரும், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேரும்,
சென்னை ராயப்பேட்டையில் இருந்து ஒருவர் என 129 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். விஷச்சாராயத்துக்கு 63 பேர் பலியாகி இருந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் மகேஷ் (41) என்பவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச்சாராயத்துக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனிடையே அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 4 பேர், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலியை தொடர்ந்து கள்ளசாராயம் வியாபாரம் செய்வோர் மற்றும் கடத்துபவர்களை கைது செய்ய எஸ்.பி ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரபல சாராய வியாபாரி மணிகண்டனை (42) சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவர் காவல் நிலையத்திலிருந்து தப்பிவிட்டார். இந்த நிலையில் நெடுமானூர் கிராமம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 24 மணி நேரத்தில் மீண்டும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.