டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய விலைப்பட்டியலை வைக்க பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் வருவாயில் மதுபான விற்பனையில் கிடைக்கும் வருவாய் முக்கியமானது. இந்த ஆண்டு 450000 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனையாகும் நிலையில், திருவிழா, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை மிகப்பெரிய அளவில் வசூலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று தேதி முதல் மதுபாட்டில்களின் மீதான விலை உயர்வை அமல் படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் விலை உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்கள் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண மற்றும் நடுத்தர ரக, உயர்தர ரக மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பீர் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி, ஒயின், டெகிலா மற்றும் உள்ளூர் ஒயின் விற்பனை விலையில் மாற்றமில்லை, மாற்றியமைக்கப்பட்ட விலை பட்டியல் அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்படுவதை மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பிப்.1 முதல் விற்கப்படும் மதுபானங்கள் புதிய விலைப்படியே விற்பனை செய்ய வேண்டும். புதிய விலைப்பட்டியலை கடைகளில் வைக்க வேண்டும்.

தற்போது ஜன.1 முதல் நடைபெற்ற விற்பனை விவரம் உள்ளிட்ட அனைத்து தரவுகளை சேமித்து வைக்க வேண்டும். புதிய விற்பனை விலையை மென்பொருள்களில் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் இந்த பணிகளை மிகுந்த கவனத்துடன் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறு நிகழ்ந்தால் அவர்களே பொறுபேற்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.